Sunday, July 10, 2011

ஏற்றுமதி உலகத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம். 4

ஏற்றுமதி உலகத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

ஜொலிக்கும் வைரம்

குழந்தைகளை தங்கமே, வைரமே என்று அம்மாக்கள் கொஞ்சுவார்கள். குழந்தைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தங்கம், வைரம் பெண்களுக்கு. அந்த அளவு நம் நாட்டுக்கும் முக்கியம் வைரம் ஏற்றுமதி. இந்தியா, உலகளவில் அதிகளவு பட்டை தீட்டப்படாத வைரத்தை இறக்குமதி செய்து அதை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இது பல லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதுடன், இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பங்கும் வகிக்கிறது. சென்ற வருடம் மே மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டதை விட இந்த வருடம் மே மாதம் 24 சதவீதம் கூடுதலாக, அதாவது இந்த வருடம் மே மாதம் மட்டும் 2.22 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 கோடி ரூபாய்கள்) அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி

கானா நாட்டுக்கு சென்ற நமது இந்திய இஞ்சினியர் ஒருவர் தற்போது அந்த நாட்டின் பெரிய விவசாய விளைபொருட்கள் உற்பத்தியாளராகியுள்ளார். அதாவது சுமார் 2200 ஹெக்டேர் அளவில் விவசாயம் செய்து வருகிறார். ரிசோர்சஸ் ஆப்பிரிக்கா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதன் மூலம் ஏற்றுமதியும் செய்து வருகிறார். இது போல பெரிய அளவில் உற்பத்தி செய்யும் போது தான் உள்நாட்டு விற்பனையாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு விற்பனையாக இருந்தாலும் சரி போட்டி போட இயலும். கூட்டுறவு முறையில் பல நபர்கள் ஒன்றாக சேர்ந்தால் இந்தியாவிலும் இதுவும் சாத்தியமே.


மங்கும் மெழுகுவர்த்தி ஏற்றுமதி

மெழுகுவர்த்தி தொழிலுக்கு தேவையான மெழுகின் விலை கூடிக்கொண்டே செல்கிறது. மேலும், அதை பேக் செய்ய உதவும் போர்டின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதானல், சிறிய அளவில் மெழுகுவர்த்தி தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மிகவும் பாதிக்கபப்ட்டுள்ளார்கள். இது தவிர உலக அளவில் நம்மால் போட்டி போட இயலவில்லை. கச்சா எண்ணெய் விலை கூடுவது தான் காரணம். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இவர்களின் வாழ்வில் ஒளி வருகிறதா என்று பார்ப்போம்.

பத்தமடை, தைக்கால், திருச்சி பாய்கள்

ஒரு காலத்தில் பர்மா பாய்கள் மிகவும் பிரசத்தி பெற்றவை. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எதை பர்மாவில் இருந்து கொண்டு வருகிறார்களோ இல்லையோ, பர்மாவிலிருந்து பாய்கள் கொண்டு வர மறக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு பாய்கள் அங்கு மிகவும் பிரபலம். அந்த அளவிற்கு நமது பத்தமடை, தைக்கால், திருச்சி கோரைப்பாய்கள் மிகவும் பிரபலம். தற்போது அந்த தொழில் நசிந்து வருகிறது. ஏற்றுமதிக்கு மிகவும் வாய்ப்புள்ள தொழில் இது. அதாவது, நல்ல தரமான கோரை பாய்கள் தவிர, கோரைகள் மூலமாக திரைசீலைகள், யோகா மேட் போன்றவைகளும், மற்ற பல உபயோகமான பொருட்களும் தயாரிக்கலாம். தரமான பொருட்களுக்கு நல்ல விலைகள் கொடுத்து வாங்க வெளிநாட்டில் பலர் தயாராக இருக்கிறார்கள். இந்த தொழில் நசித்துப் போகும் முன்பு அரசாங்கம் ஒரு புத்துயிர் கொடுக்க வேண்டும்.


டெக்ஸடைல்ஸ் மற்றும் ஆயத்த ஆடைகள்

2005ம் வருடத்திலிருந்து 2010ம் வருடம் வரை உள்நாட்டு ஆயத்த ஆடைகள் விற்பனை 6.2 சதவீதம் கூடியுள்ளது. இந்த துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஆயத்த ஆடைகளின் விற்பனை வளர்ச்சி வருடத்துக்கு 9 சதவீதம் இருக்கும். ஏற்றுமதி 12 பில்லியன் டாலர்களை கடக்கும் எனவும் கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இஞ்னியரிங் பொருட்கள் ஏற்றுமதி

இந்தியாவின் இஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி, அதாவது டிரான்ஸ்போர்ட் சாதனங்கள், கேபிடல் குட்ஸ், மெஷினரிகள், கேஸ்டிங், போர்ஜிங்ஸ் மற்றும் பாஸ்ட்னர்ஸ் போன்றவைகளின் ஏற்றுமதி கூடிக்கொண்டே செல்கிறது. அதாவது மே மாதம் மட்டும் 7.9 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்துள்ளோம் (கிட்டதட்ட 35,500 கோடி ரூபாய்கள் மதிப்பிற்கு). இந்த வருடம் 72 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வருட ஏற்றுமதியில் கிட்டதட்ட இது மூன்றில் ஒரு பகுதிக்கு சிறிது குறைவாகும். தமிழ்நாட்டில் இந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகம், ஆதலால் ஏற்றுமதி வாய்ப்புக்களும் அதிகம்.


இந்த வார இணையதளம்

http://www.toboc.com/கனடா நாட்டை சேர்ந்தவர்களால் உருவாக்கபப்ட்ட இணையதளம். 222 நாடுகளில் உள்ள ஏற்றுமதி / இறக்குமதியாளர்களை இணைக்கும் இணையதளம். உபயோகமான டிரேட் லீட்களை தருகிறது.பணம் கட்டி சேரவேண்டும் என்ற கட்டுபாடு இருந்தாலும், முதல் மூன்று மாதம் இலவசமாக மெம்பராகவும் வாய்ப்புக்கள் உள்ளது.


கேள்விக்கு என்ன பதில்?

ராமநாதன், மதுரை

கேள்வி: ஏற்றுமதிக்குஅடிப்படையாக செய்ய வேண்டியது என்ன?

பதில்: நிறைய பேர் தமிழ்நாட்டில் ஏற்றுமதி செய்ய துடிக்கிறார்கள். எந்த ஒரு தொழிலில் இறங்க விரும்பினாலும், அந்த தொழிலைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் ஏற்றுமதி தொழிலில் இறங்க விரும்புபவர்கள் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள / படிக்க பொறுமை இல்லை. ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் தமிழில் / ஆங்கிலத்தில் வந்துள்ளன. அவற்றை படித்து ஏற்றுமதி நடைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது தவறில்லாத ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். மேலும், தங்களின் பாடுபட்ட பணம் காணாமல் போக உதவும். ஏனெனில் ஏற்றுமதியில் வெளிநாட்டில் இருந்து உங்களிடம் சரக்கு வாங்குபவரகளை பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவு. ஆதலால், நடைமுறைகளில் ஏதும் தவறு வராத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும்.


அறிவழகன், திருச்சி

கேள்வி:இந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது?

பதில்:இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு ஏர்றுமதி வாய்ப்புக்கள் இருந்தாலும், உங்களுக்கு தெரிந்த / அறிந்த பொருட்களையே ஏற்றுமதி செய்வது நல்லது. மேலும், உங்கள் குடும்பம் தற்போது செய்து வரும் / தயாரித்து வரும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைத்தால் அது தான் நல்ல முடிவாக இருக்கும். அதுவே உங்கள் ஏற்றுமதியின் தொடக்கமாக இருக்கலாம். அதன் பிறகு மற்ற பொருட்களுக்கு உங்கள் ஏற்றுதியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். தெரியாத பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது பல பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது.


கேள்விகள் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.comஅடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம்.

No comments:

Post a Comment