Monday, November 7, 2011

சென்ற வர ஏற்றுமதி உலகம் 17

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


சென்ற வார ஏற்றுமதி இறக்குமதி உலகத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடந்துள்ளது என்று பார்ப்போம். பெரிய நிகழ்வு என்று பார்த்தால் ரூபாய் மதிப்பு கீழே விழுந்தது தான். கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு 50க்கும் கீழே சென்று முடிவடைந்தது.

டாலரும், ரூபாயும்
ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் இவை. அதே சமயம் இந்தியா இறக்குமதியையும் அதிகம் சார்ந்துள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவை பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் மற்ற பொருட்களின் விலை கூடும் வாய்ப்புக்கள் உள்ளது.


பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி

பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனையை விட ஏற்றுமதி கூடுதல்
கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. பஜாஜ் ஆட்டோவின் த்ரி வீலர், அதாங்க நம்ம ஆட்டோ அதிகம் ஓடுவது இந்தியாவில் தான் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் ஆட்டோக்களை விட அதிக அளவில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவைகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் ஹமாரா பஜாஜ் என்ற வாசகத்தை பார்க்கும் போது உள்ளம் உண்மையாகவே துடிக்கிறது.


ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை

ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை, அதாவது கிளஸ்டர் முறை மிகுந்த பயனளிக்கும் என்று எக்சிம் பாங்கின் தலைவர் டிசிஏ ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகமாக கிடைக்கும் பொருட்களை வைத்தோ அல்லது அதிகமான தொழில் செய்பவர்களை வைத்தோ ஒருங்கிணைந்து பெரிய அளவில் உற்பத்தியை கூட்டி செய்யும் போது உற்பத்தி செலவுகள் குறையும். அது நமக்கு ஏற்றுமதியில் உலகளவில் மற்ற நாடுகளின் விலையுடன் போட்டி போட இயலும். மேலும் இது போன்ற முயற்சிகளுக்கு அரசாங்க ஆதரவுகளும் உள்ளன என்றார்.

இந்திய பர்மா உறவுகள்இந்திய பர்மா உறவுகள் நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேர்கள் குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவுக்கு சென்று அந்த நாட்டையே வளப்படுத்தி விட்டு நிர்கதியாக எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தார்கள். தற்போது அங்கு சூழ்நிலைகள் சரிவர வந்து கொண்டிருக்கிறது. இந்திய பர்மா உறவுகளும் நன்கு இருக்கிறது. அங்கு விவசாயம், எரிசக்தி ஆகிய துறைகளில் இந்திய முதலீடு செய்ய நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிய வருகிறது.

 டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சிசென்ற வாரம் நடைபெற்ற இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, இந்திய கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு சுமார் 900 கோடி அளவு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுத் தந்துள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதியை பெருக்க கட்டாயம் இது போன்ற கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். புதிய ஏற்றுமதியாளர்கள் இது போன்ற கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் சென்று பார்த்து வரவேண்டும். அப்போது தான் எப்படிப்பட்ட பொருட்கள் தயாரிக்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள், எப்படி ஸ்டால் டிஸ்ப்ளே செய்கிறார்கள் போன்ற ஐடியாக்கள் கிடைக்கும்.

பின்னலாடைகள் ஏற்றுமதி
உலகளவில் பின்னலாடைகள் ஏற்றுமதியில் சீனா தான் முன்னணியில் இருக்கிறது. 53.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டி சர்ட்கள் உற்பத்தியில் உலகளவில் பங்களாதேஷ் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிற்கு மூன்றாவது இடம் தான். தொழிலாளர்கள் பிரச்சனை, சாயப்பட்டறை பிரச்சனை போன்றவை நம்மை பின்னுக்கு தள்ளி வருகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பலர் பங்களாதேஷ் சென்று அங்கு தொழிற்சாலைகள் நிறுவி வருகின்றனர்.

பஹாமஸ்  தந்த பயம்
பஹாமஸ்  நாட்டுக்கு ஏற்றுமதிகள் கூடிவருவதால் அது வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர ஒரு வழியா என்று எல்லோரும் பயந்தனர். அதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹாமசுக்கு ஏற்றுமதி 2 பில்லியன் டாலர் தான் இருந்தது. அது சென்ற வருடம் 4 பில்லியன் டாலராக உயர்ந்ததை கண்டு எல்லோரும் பயந்தனர். பின்னர் அது இந்தியாவிலிருந்து ஆயில் ஏற்றுமதி 88 சதவீதம் கூடியுள்ளது என்று கண்டுபிடித்து ஆறுதல் அடைந்தனர். எங்கு ஓவர்  இன்வாசியிங் நடைபெறுகிறதோ என்ற பயம் தான் காரணம்.



கண்ணபிரான்
சேலம்


கேள்வி

சேலத்திலிருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்கள் என்னென்ன?

பதில்

சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. சேலத்தில் இருந்து காட்டன் துணிகள், கொலுசுகள், எவர்சில்வர் பாத்திரங்கள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் அது சார்ந்த பொருட்கள், மூலிகைகள் போன்றவைகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால், சேலம் ஈரோடில் உள்ளவர்கள் நேரடி ஏற்றுமதியில் ஈடுபடாமல், ஏற்றுமதி செய்பவர்களுக்கு சப்ளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சேலம், ஈரோடு இரு இடங்களிலும் தினமலர் சார்பாக ஏற்றுமதி செய்யலாம் போன்ற கருத்தரங்கள் நடத்தி பலரை ஊக்குவித்தும் இருக்கிறோம்.


இந்த வார இணையதளம்

www.kompass.com

உலகளவிலுள்ள பி டு பி இணையதளம். அதாவது பிசினஸ்  டு பிசினஸ் இணையதளம். உலகத்தின் சிறந்த கம்பெனியால் நடத்தப்படும் இணையதளம். நல்ல பல பயனுள்ள செய்திகளும் அடங்கியுள்ளது. சென்று பாருங்கள். மெம்பராக சேரும் பட்சத்தில் பல நல்ல லீட்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com.

No comments:

Post a Comment